இப்படியும் ஒரு பயணம்


யாழ்ப்பாணத்தை விட்டு போயே ஆகவேண்டும் என்பதை சுப்பிரமணியத்தின் குடுப்பம் கடைசிநேரத்தில் தான் முடிவெடுத்துக்கொள்கிறது.
“மரகதம், நிறைய சாமான் சக்கெட்டேல்லாம் கொண்டு போகேலாதாம், சுமந்திரனாக்கள் சொன்னவங்கள் இதுதான் கடைசிநாளோ தெரியேல்லையாம் மிச்சமிருக்கிற ஆக்களைக்கொண்டு போய்ச்சேக்கிறதே கஷ்ரமாம், ஒரு உடுப்புபாக்கும், ரெண்டு மூண்டு சட்டிபானையும், மீனாண்டையும், மதன்டையும் புத்தகத்தையும், டொக்கீமண்ட் பாக்கையும் மட்டும் எடுத்து வச்சாப்போதும், என்ன நான் சொல்லுரது விளங்குது தானே?”

மரகதம் சினிங்கின படியே
“ என்ரை சகோதரம் உங்கடை சகோதரம் எல்லாரும் இங்கைதானே இருக்கினம் நாங்க மட்டும் தனிச்சுப்போய் என்ன செய்யப்போரம்? அந்தக்காட்டுக்கை பிள்ளையள் ஏலெவெலும் ஓலவெலும் எடுக்கிறநேரத்திலை? எங்கடை ரெண்டு பேருண்டை அம்மாக்களும் வயசுபோன நேரத்திலை அதுகளையும் விட்டுட்டு”

“ஏன் இப்பிடி நிறைய யோசிக்கிறாய், என்னுமொரு ரெண்டு மூண்டு மாதம் தானாம் அதுக்குப்பிறகு யாழ்ப்பாணத்தை திருப்பி பிடிச்சிடுவாங்கள், லெற்சக்கணக்கா யாழ்ப்பாணத்துச்சனமெல்லாம் அங்கபோய் எப்படியோ இருக்குதுகள் தானே? ஏதோ நாங்கமட்டும் தான் போறமாதிரி எல்லோ உன்ர கதை, என்டை, உன்டை அக்கா, அண்ணாக்களை விடு அவை பொடியள் வெண்டிட்டா பாயாசம் ஊத்துவினம் தோத்திட்டா போக்கத்தவனுகள் எண்டு பொங்குவினம்.. அவை நேரத்துக்கு நேரம் நிறம் மாறுவினம் எங்களாலை அது முடியாது”
“சத்தப்போடாதீங்கோ உங்கால உங்கடை அண்ணாக்கு கேக்கப்போகிது – ஆற்ற வீட்டை இருக்கிறம் எண்டு யோசிச்சுக் கதையுங்கோ”
சுப்பிரமணியத்தின் குடும்பம் எப்போதோ தென்மறாட்சியில் இருந்து வடமராட்சி நெல்லியடியில் இருக்கும் அண்ணன் வீட்டுக்கு இடம்பெயர்ந்திருந்தது. அண்ணன் வீட்டில் இவர்களோடு சேர்த்து ஒரு 6 – 7 குடும்பம் இருக்கும் பக்கத்தில் ஒருவரும் இல்லாமல் இருந்த வீட்டையும் கேட்டு எடுத்து ஒரு மாதிரி 4 மாதங்கள் கடந்து விட்டது.

இந்த நாலுமாதங்களுக்குள் ஒரு குடும்பமாகிப்போன இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான உணர்வோட்டங்கள் “வலிகாமப்பக்கம் சனத்தை ஆமி உள்ளை எடுக்கிறானாம், சனமெல்லாம் சரமாரியாப்போகிதாம், வீடெல்லாம் அப்படியே கிடக்காம், நாங்களும் போவமோ” என்று ஒருசாராரோட வாதமும்,
“பெடியள் நல்லசமையம் பாத்துக்கொண்டு இருக்கிறாங்கள், ஆமியோடை சரிக்குச்சரி நிண்டிருந்தா நிறைய சனம் செத்துப்போடுமெண்டு தான் வித்ரோ பண்ணிக்கொண்டு போட்டாங்கள் எப்பிடியும் இந்தக்கிளமேக்க பிடிச்சிடுவாங்கள், அங்க நாகர்கோவில்ப்பக்கம் மட்டக்களப்புப்பெடியள் நிறைய வந்திருக்கிறாங்களாம் எண்டு கதைக்கிதுகள்” இன்னொருபக்கம் பெண்கள் கூட்டம்
“அங்க சங்கக்கடேலை இனி கடலை கௌபியெல்லாம் முடிஞ்சிதாம், சங்கக்கடை மனேஞர் சொல்லிறார் தங்களட்டை இனி அரிசியும் முடியிதாம் சனமெல்லாம் நூடில்சா வாங்கீற்றுப்போகிதாம் சும்மா வெங்காயத்தைப்போடிட்டு தாளிச்சுப்போட்டு சாப்பிடுதுகளாம், பேக்கரிலை பாணுக்குப்போனா ஒராளுக்கு ஒண்டுதான் எண்டுராங்கள் நாங்கள் ஒரு வீட்டிலை இருபத்தஞ்சு முப்பதுபேர் இருக்கிறம் அப்ப எத்தனை பேர் கியூலைபோய் நிக்கிறது, மரத்திலை முருங்கைக்காயையும் முடிச்சிட்டம் இனி கறியாக்கவும் ஒண்டுமில்லை..”
“நேற்று நேசமக்கா பிஞ்சு நொங்கிலை கறிவச்சவவாம் நல்லா வந்ததாம்”
ஓருபக்கம் பிள்ளையள் “இந்த முறை ஓலவல் எக்சாம் இங்கை நடக்காதாம் எண்பத்தாறாமாண்டு மாதிரி எங்களுக்கு திருப்ப வைப்பாங்கள் போல, வைச்சாலும் என்னத்தை எழுதிறது வாத்தியார் மாரெல்லாம் வன்னிக்குப்போட்டினம் ஆர் படிப்பிக்கிறது… பேசாம இந்த வருசம் விட்டிட்டு அடுத்தவருசம் எடுக்க வேண்டியதுதான்” எண்டு சாட்டிவிட்டு கரம்போட்டும், பட்பின்னலும் மொனோபிளியும், காட்சும் எண்டு தாங்க விளையாட்டுப்பிள்ளைகள் தானே என்று அவர்கள், அவர்கள் வேலையைப்பார்க்க.

சுப்பிரமணியம் மட்டும் அங்கையும் இங்கையும் ஓடியபடியே இருப்பார்
“அங்க ஆஸ்பத்திரிலை டாக்குத்தர் மாரெல்லாம் இல்லையாம் செஞ்சோன்ஸ் அம்பிலன்ஸ் பெடியளைக்கொண்டு வந்தா நல்லமாம்”
மீனாவையும் மாதவனையும் கூட எந்த நேரமும் பேசாமல் விளையாட விட்டு விடமாட்டார்,
“டேய் மாதவன் வெளிக்கிட்டு வா இண்டைக்கு கனக்கக் காயப்பட்ட சனம் வந்திருக்காம் சும்மா படிச்சு சேட்டிபிக்கற் வாங்கிவைக்கிறதுக்கே செஞ்சோன்ஸ் அம்பிலன்சிலை படிச்சனி”
“ மரகதம் கொஞ்சம் அக்கம் பக்கச்சனங்களட்டை வெள்ளவேட்டி சேர்த்து துவைச்சு அடுப்பிலை போட்டு ஸ்டீம்பண்ணித்தா கொண்டே குடுப்பம் பஞ்சு கிஞ்செல்லாம் முடிஞ்சிதாம் கட்டிரதுக்கும் ஒண்டும் இல்லையாம்”
என்று தன்னால் ஆன உதவிகளை இந்த இடம் பெயர்ந்த மக்களுக்கு செய்வதிலேயே குறியாய் இருந்தார்.
“சனமெல்லாம் தான் தப்பிர வழியைத்தேடுதுகள் இந்தமனுசன் வேறை எலி தான் போக வளியில்லாமல் விளக்குமாத்தை தூக்கினது மாதிரி” என்ற மரகதத்தின் வழமையான புலம்பல் வேறு எப்போதும் போல.

இப்போ கடைசிநேரம், போகும் வழி கூட கரணம் தப்பினால் மரணம் எனும் நிலை, சுமந்திரன் ஆக்களும் “ஜயா உங்களை எப்படியும் அனுப்பீற்றுத்தான் மற்றவேலை” என்று பிடிவாதமாக இருந்தார்கள், இப்போது முடிவாகிவிட்டது அனாலும் மற்றவர்கள் விடுவதாயில்லை “ஏன் மரகதம் அந்தக்காட்டிக்கிள்ளை போய் என்ன செய்வாய் சின்னாக்கு வேறை கால் என்னும் சரியாகேல்லை, சனத்தோட சனமா இங்கை இருந்திடுங்கோ உன்ரை கொத்தானுக்கும் அரசாங்க உத்தியோகம் அவங்கள் பேந்து வேலையை நிப்பாட்டிப்போடுவாங்கள் – நீங்கள் என்ன அங்க போய் விறகு வெட்டிப்பிளைக்கக் கூடிய ஆக்களே?”
“என்னக்கா செய்யிரது இவரைப்பற்றித்தெரியும் தானே லேசிலை ஊரை விட்டு வெளிக்கிடமாட்டார் எவ்வளவு பிரச்சினை வந்து சனமெல்லம் ஊரை விட்டு ஓடேக்கை கூட பிள்ளையளை மட்டும் இங்கை அனுப்பீற்று பங்கருக்கை கிடக்கிற மனுசன் இப்ப மட்டும் போவம் எண்டு நினைக்கிதெண்டா அது சரியாத்தான் இருக்கும் – எனக்கும் எப்படி அம்மாவை கடைசிநேரத்திலை பிரிஞ்சு போரதெண்டு இருக்கு, எல்லாம் ஒரு ரெண்டு மூண்டு மாதத்துக்குத்தானே அக்கா ஏதே சனத்தோட சனமா போவம். எங்கடை பெடியளை நாங்களே நம்பாட்டி பிறகெப்படி”

ஆறு மணியளவில் வீட்டுக்கு முன்னே ஒரு லொறி வந்து நின்றது, சுப்பிரமணியம் குடும்பம் இந்த நீண்ட பயணத்திற்கு தயாரானது. உறவினர்கள், ஒன்றாக வாழ்ந்தவர்கள் எல்லோருமே ஒரு கொலைக்களத்திற்கு அனுப்புவதுபோல் கண்ணீரோடு வழியனுப்பினர். மரகதம் வீரிட்டு அழுதாள்
“ஜயோ! சாகுமட்டும் என்ர காலம் இங்கையே போகோணும் எண்டு ஆசப்பட்டன், போக்கத்த சந்திரிக்கா…. இவளெல்லாம் ஒரு பொம்பிளதானோ”
“னேய் அழாதயனை, கொஞ்சனாளிலை திரும்பி வந்திடுவம் தானே” என்று ஆறுதல் படுத்தினர்.
லொறி இன்னும் சில பயணிகளை ஏத்தியதன் பின் பயணத்தின் முக்கிய கட்டத்திற்கு வந்து அடைந்தபோது வானம் முழுதாக வெளுத்திருந்தது. அங்கே இவர்களைப்போல் பலர் கிளாளி நீரோடையைக்கடப்பதற்குத் தயாராக நின்றிருந்தார்கள். அறிவுறுத்தல்களெல்லாம் குடுக்கப்பட்டது
“எல்லாரும் கவனமாக்கேளுங்கோ இங்கையிருந்து கிளாலி இக்கரைக்கு நடந்துதான் போப்போறம், இக்கரைலை இருந்து ஒரு கொஞ்சத்தூரத்திலை ஆமி நிக்கிறான் அதனாலை நீங்கள் பெரிசாச்த்தம் கித்தம் போடக்கூடாது, ரோச்சுக்கீச்சு அடிச்சிடாதீங்கோ, அவன் பரா லைற் அடிச்சானெண்டா உடன கீழ படுத்திடுங்கோ, இல்லாட்டீ எல்லாற்றை உயிருக்கும் ஆபத்துத்தான்”
இது அங்கு வந்த எல்லோருக்குமே ஒரு புதிய திகிலைக்கொடுத்தது.

முதலில் செல்பவர்களுக்கு இடம் நிச்சயம் என்பது இங்குமட்டும் ஒரு பிரச்சனையில்லாமல் இருக்கும் என்று இருந்துவிட சுப்பிரமணியம் ஒன்றும் முன்னனுபவம் இல்லாதவர் கிடையாது. அதனால் சுப்பிரமணியம், மீனா, மாதவன் மூவரும் முன்சென்று இடம் பிடிக்க மரகதம் ஊன்று கோல் உதவியோடு நடந்து வரும் சின்னாவோடு ஆறுதலாக வருவது என்று தீர்மானிக்கப்பட்டதற்கமைய பயணத்தைத்தொடர்ந்தனர்.  இடையில் சென்ற பயணி ஒருவர் சுருட்டுப்பற்றவைப்பதற்காகவோ என்னவோ சிறு பொறியை பத்தவைற்று விட. சில வினாடிக்குள் பெரும் சத்தத்துடன் ஒரு குண்டு வந்து பயணிகளிடையே விழுந்து வெடித்தது.. தொடர்ந்து ஒருசில வெடிகள்.. முன்னாலிருந்து பல விதமான கதறல்கள், சிலர் திரும்பி வந்தபாதையை நோக்கி ஓடத்தொடங்கினர், மரகதத்துக்கும் சின்னாவுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை
“ஜயோ கொப்பாக்கள் முன்னாலை போச்சினம்… ஆருக்கு என்ன நடந்துதோ தெரியேல்ல”
“அம்மா ஒண்டும் நடந்திராது நீங்க பாஸ்ரா வாங்கோ” போகும் பாதையில் கிடந்த காயப்பட்ட உடல்களை திகிலுடன் ஆராய்ந்து வேகமாக கடந்து சென்றனர். இவர்கள் நடந்து சேர்ந்தபோது பெரும்பாலான மக்கள் படகுகளில் ஏற்றப்பட்டிருக்கவேண்டும் அந்த இருட்டிலும் மெல்லிதாகத்தெரியும் உருவ அசைவுகள் சிலவற்றையே காணக்கூடியதாய் இருந்தது. சுப்பிரமணியத்தையும் பிள்ளைகளையும் கண்டபோதுதான் மரகதம் அப்பனே முருகா சன்னிதியானே என்று சொல்லுவதை நிறுத்திக்கொண்டாள். இவர்கள் குடும்பம் ஏளாவதாக தொடுக்கப்பட்ட படகில் ஏற்றப்பட்டார்கள், அந்த படகுத்தொடரில் இது தான் கடைசியாக தொடுக்கப்பட்டது. படகு மெல்ல நகரத்தொடங்கியது. சந்திரன் இப்போதுதான் கிழக்கில் இருந்து கொஞ்சம் மேலே ஏழும்பியிருந்தது. மரகதம் அங்கே நிகழ்ந்த மரண மொனத்தைக்கலைப்பதுபோல் மெல்ல முணு முணுத்தாள் “என்னும் எவ்வளவு நேரம் எடுக்குமோ தெரியேல்ல?” “அம்மா சொட்டிலை போயிடும் – நான் இதாலைதானே கிளிநொச்சிக்கு தமிழ்த்தினப்போட்டிக்குப்போயிருந்தனான் – டக்கணப் போயிட்டம்” என்று பதிலுறைத்தாள் சின்னா “எடியே நீ இதாலையோ போனனி இதை முதலே தெரிஞ்சிருந்தா உன்னை விட்டிருப்பனே” “உஷ்…” என்றார் சுப்பிரமணியம்;;. மறுபடியும் மௌனம்.

மௌனத்தைக்கலைப்பதுபோல் மெல்லிதாய் ஒரு சத்தம், இவர்களோடு வந்த இன்னுமொரு இளம்பயணி
“எல்லாரும் குனிஞ்சு படுங்கோ அவன் பரா லைற் அடிச்சிட்டான்”
“நீட்டுக்குப்போற இந்தப்படகுகளைப் பாத்திடுவான் படுத்தென்ன பிரியோசனம்” படுத்திருந்தபடி மனசுக்குள் மட்டும் பேசிக்கொண்டார் சுப்பிரமணியம். சில வினாடிகள் கூட இல்லை சீறிக்கொண்டு வந்தது ஒரு ஆட்டிலறி எங்கோ விழுந்து வெடித்தது… தொடர்ந்து என்னும் சில வெடிகள். அதன் பின் படகு நகர்வதாகத்தெரியவில்லை. நேரம் நீண்டுகொண்டே போனது. சந்திரன் இப்போ மேற்கிலிருநந்து கொஞ்சம் தான் மேலே நின்றான். அங்கு எல்லோருமே நடுக்கடலில் தள்ளிவிட்டதுபோல் உணர்ந்தார்கள். போல் என்ன உண்மையாகவே நடுக்கடலில் தனித்துவிடப்பட்டார்கள். மோட்டாரோ துடுப்போ எதுவுமே இல்லாத படகு இது. முன்னே செல்லும் ஒரு படகோடே மற்ற ஏழு படகுகளும் கட்டி இழுத்துச்செல்லப்பட்டன. இப்போது ஏனோ இது அசையவில்லை சுப்பிரமணியமும் மாதவனும் குசு குசு என்று பேசிக்கொண்டார்கள் “முன்னுக்குப்போன படகுக்கு அடிவிழுந்திட்டுது போல” “இனி நாங்க என்ன செய்யிரது” என்ற மாதவனுக்கு “இன்னும் கொஞ்ச நேரம் இருந்து பாப்பம் விடியிரதுக்கிடைலை ஆரும் வராட்டி உனக்கும் சின்னாக்கும் நீந்தத்தெரியும் தானே நீங்க ரெண்டுபேரும் நீந்திப்போய்ச்சேருங்கோ நாங்கள்…” என்று இழுக்க ஏதோ கொஞ்சம் காது குடுத்த மரகதம் விம்மத்தொடங்கினாள் “உன்ரை அம்மா வேறை ஆ ஊ எண்டா அழத்தொடங்கிடுவா, என்ன செய்யிரதெண்டு யோசிக்கிறதை விட்டிட்டு அழுதாக்காரியமாகுமே ஆ.. நீ முதல்லை உன்ரை ஒப்பாரியை நிப்பாட்டு”

மிக அண்மித்த தூரத்தில் ஒரு படகு தென்படுவது போல் தோன்ற மரகதம் தான் முதலில் கவனித்துவிட்டு
“ஜயோ ஆமிக்காரன் வாரான் போல சரி இனி என்ன செய்யிரது… அப்பவும் நான் சொன்னனான் ஊரைவிட்டுப்போவேண்டாமெண்டு”  கொஞ்சம் கூர்ந்து கவனித்த சுப்பிரமணியம் “சீ சீ இது ஆமி மாதிரி இல்லை நம்மட பெடியள் போல தான் கிடக்கு” படகு கிட்டவே வந்து விட்டது. அது நம்மவர்கள் தான். இவர்களை ஏற்றிச்செல்வதற்காகவே அனுப்பப்பட்ட படகாய் இருக்கவேண்டும், ஓவ்வொருவராக தங்கள் படகினில் ஏற்றினர். அது வேகப்படகு என்பதால் சிறிது நேரத்தில் அக்கரையை சென்றடைந்தது.

முக்கியமான பயணத்தின் கட்டத்தை இவர்கள் முடிந்திருந்த போதும் இன்னும் தொடர இருக்கும் கேள்விக்குறிகளைப்பற்றி அறிய சக்தியில்லாமல். பெருமூச்சொன்றை எறிந்தது சுப்பிரமணியம் குடும்பம்.
நீண்ட காத்திருப்பு – கிளிநொச்சிக்கான பயணம் – அகதி முகாம் வாழ்க்கை – ஆரொ ஒருவரின் உதவி – மீண்டும் புதிய உலகில் தொலைந்த வாழ்க்கையையும் கல்வியையும் சமூக நலனையும் தேடி இவர்கள் பயணம் தொடர்ந்தது….. இதோ இப்போ போய்விடுவோம் ஊருக்கென்ற உறுதியான எதிர்பார்ப்போடு….!

Advertisements

4 thoughts on “இப்படியும் ஒரு பயணம்

 1. ஜேகே says:

  ஒரு உண்மையான அனுபவ பகிர்வு … எங்கள் தமிழ் சரளமாக கதையில் வருகிறது. அது உங்களுக்கு பலம். அதுவே சில இடங்களில் ஓவர் டோஸ் ஆவது பலவீனம்.

  //சொட்டிலை போயிடும்//
  இந்த சொல்லு நான் மறந்தே போயிட்டன். எழுதி ஞாபகப்படுத்தியதுக்கு நன்றி.

  எனக்கும் கிளாலியால கடந்த நாட்கள் ஞாபகம் வருது .. அது ஒரு காலம் தான் …

  தப்பாக நினைக்க மாட்டீர்கள் என்றாள் ஒன்று சொல்கிறேன் .. . அந்த முடிவு “போட்டு தாக்கவில்லையே” .. ஒரு சாதாரண அனுபவ பகிர்வு போன்றே இருந்தது. இது சிறுகதையாவதற்கு கொஞ்சம் தகிடுதத்தங்கள் செய்யவேண்டும் என்று நினைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கோ … எழுத எழுத இன்னும் சூப்பரா வரும் ..

 2. வல்வைத் தென்றல் says:

  பதிலுக்கு நன்றி ஜேகே!
  //அதுவே சில இடங்களில் ஓவர் டோஸ் ஆவது பலவீனம்//
  திருத்திக்கொள்கிறேன் பாஸ்!

  உங்கள் கிளாலிப்பயனத்தையும் சுவையான பதிவாக்கி விடுங்களேன். இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களை சுவையாகச்சொல்ல உங்களால் தான் முடியும்.

  ஒரு சாதாரண அனுபவ பகிர்வு போன்றே இருந்தது உண்மைதான் இதைத்தான் நான் எழுத நினைத்தேனோ என்னவோ…. முடிவு அசத்தலாக வேண்டுமென்றால் நீண்டிருக்கவேண்டும் ஓயாத அலைகள் வரை 🙂 அல்லது பொய்சேர்ந்திருக்கவேண்டும்….! முயற்சிசெய்திருக்கலாம் தான்….!

  ஆக்கபூர்வமான உங்கள் பதிலுக்கு நன்றிகள்….!

 3. நீண்டகாலத்துக்கு பிறகு எமது நினைவுக்குப்பையை கிளறீ விட்டிருக்கிறீர்.. அனுபவங்கள் பதியப்படவேண்டும்,பகிரப்படவேண்டும், அந்த விடயத்தை சிறப்பாக செய்திருக்கிறீர்.. தொடர்ந்து வரவேணும் இதுபோன்ற ஆக்கங்கள்

  • வல்வைத் தென்றல் says:

   நன்றி நண்பரே! உங்கள் கருத்திற்கும் வருகைக்கும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s